​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம்" - இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் கோரிக்கை..!

Published : Sep 24, 2022 6:20 AM



"ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம்" - இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் கோரிக்கை..!

Sep 24, 2022 6:20 AM

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும், ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் ஐ.நா.சபையை வலியுறுத்தியுள்ளன.

இந்தியா, பிரேசில், வங்கதேசம் மற்றும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அளித்துள்ள கடிதத்தில், சமகாலத்திற்கு ஏற்ற வகையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முக்கிய அங்கமாகத் திகழும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன.

வளர்ந்து வரும் சவால்கள், வறுமை, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்க விரிவான சீர்திருத்தம் அவசரமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் முன்னேற்றம் இல்லாதது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள், கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற வகைகளில் பணியாற்ற சிறு தீவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆப்பிரிக்காவிற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலின் விரிவான சீர்திருத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் 34 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.